இந்தியாவில் இனி குழந்தைகளின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறி?

சமீப காலமாக இந்தியாவில் கணவனுக்கெதிராக பொய் வரதட்சணை வழக்கு தொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல குடும்பங்கள் சிதைந்து அந்தக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளின் நிகழ்காலமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதுபோன்று பொய் வரதட்சணை வழக்குகளை உருவாக்கி பெண்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் குடும்பங்களை அழித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க பிணந்திண்ணி கழுகு போல ஒரு கூட்டமே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்திற்கு சிதைக்கப்படும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளின் வேதனையைப் பற்றி உணர முடியுமா?

குடும்ப அமைப்பு சீர்கேடு அடைந்துவரும் இதுபோன்ற சூழ்நிலையில் “எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல” இந்திய அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றிவருகிறது. குறிப்பாக “பெண்ணுரிமை” என்ற பெயரில் புதிதாக வரப்போகும் விவாகரத்து சட்டத்தில் மனைவி விவாகரத்து கோரினால் உடனடியாக கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் கணவன் விவாகரத்து கோரும்போது விவாகரத்து கிடைக்காத வகையில் இந்த சட்டம் வழிவகை செய்திருக்கிறது.

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கணவனோ, மனைவியோ தனது மனம்போன போக்கில் வாழக்கையை வாழ ஆரம்பித்துவிடுவார்கள். பல விவாகரத்து வழக்குகள் நீதிமன்றத்திற்கு எளிதாக வர ஆரம்பித்து விடும். வழக்கறிஞர்கள் காட்டில் பணமழையாக இருக்கும்! நீதிபதிகளுக்கு குடும்பங்களை பிரித்து வைப்பதற்கு மாதந்தோறும் சம்பளம் தவறாமல் கிடைத்துவிடும்!! ஆனால் இதுபோன்ற குடும்பங்களில் இருக்கும் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளின் நிலை பற்றி இந்த சட்டத்தில் ஒன்றும் சொல்லப்படவில்லை.

பெண்களின் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி சட்டங்களை இயற்றும் மேதைகள் அப்பாவிக் குழந்தைகளின் நலனில் சிறு துளி கூட அக்கறை காட்டவில்லை என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த நிலை இப்படியே நீடித்தால் இந்தியாவில் குழந்தைகளின் எதிர்காலம் வேதனை மிகுந்த கேள்விக் குறியாகிவிடும் என்பதில் துளியும் சந்தேகமில்லை என்பதை பின்வரும் செய்தி காட்டுகிறது.

குழந்தைப் பருவத்தில் தாய், தந்தை இருவருடன் வாழும் வாழ்க்கையில் இருக்கும் இன்பம் சொர்கத்தில் வாழ்ந்தாலும் கிடைக்காது என்பது அனைவரும் உணர்ந்து அறிந்த உண்மை. இது ஏன் இந்திய அரசியல்வாதிகளுக்கும், சட்ட மேதைகளுக்கும், பெண்ணியவாதிகளுக்கு மட்டும் தெரியவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது. அல்லது யாருடைய குடும்பமோ அழிந்து குழந்தைகள் நடுத்தெருவிற்கு வந்தால் நமக்கென்ன என்ற எண்ணமா?

பெற்றோர் பிரிந்ததால் மகன் தற்கொலை

தினமலர் 5 மே 2012

செங்கல்பட்டு:பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மனமுடைந்த வாலிபர், தூக்குப் போட்டு இறந்தார்.

செங்கல்பட்டு பெரிய நத்தம் வீரபத்திரனார் தெருவைச் சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மகன் சிவராமகிருஷ்ணன், 20. பட்டய படிப்பு முடித்துவிட்டு, வேலை தேடி வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையும் பெற்று வந்தார்.இவரது தந்தையும், தாயும், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் மனமுடைந்திருந்த சிவராமகிருஷ்ணன், நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, வீட்டில் தூக்குப் போட்டு இறந்தார்.

இந்த செய்தியைத் தொடர்ந்து இந்த வீடியோக்களையும் பாருங்கள்...இதில் சிறு பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள்.