குழந்தைகளைப் பந்தாடும் பொறுப்பற்ற பெற்றோர்கள்

பெண் குழந்தை கடத்தல் : தாயிடம் இருந்து மீட்பு

ஆகஸ்ட் 28,2010 தினமலர்

சென்னை : சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை, சிவகங்கையில் அதன் தாயாரிடம் இருந்து மீட்கப்பட்டது.

சென்னை, சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். கைப்பந்து சங்க நிர்வாகி. இவரது மகள் ஜனனி (8). இவர்களுடன், பிரபாகரனின் தம்பி கதிரேசன், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகள் மோனிஷா (8) ஆகியோரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் உமாமகேஸ்வரி, ஜனனி மற்றும் தனது மகள் மோனிஷாவை அழைத்துக் கொண்டு கே.கே.நகருக்கு சென்றார்.அங்கு கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு, திரும்பும் போது ஒரு கார் அவர்களை உரசியபடி வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மூவர் ஜனனியை காரில் ஏற்றிக் கொள்ள கார் பறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த உமா மகேஸ்வரி, பிரபாகரனை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பிரபாகரன் இதுகுறித்து, கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வமணி, தனிப்படை அமைத்து விசாரணையை துவக்கினார்.அப்போது, பிரபாகரனின் மனைவி ஜெயலட்சுமி கருத்துவேறுபாடால் பிரிந்து சிவகங்கையில் தந்தை வீட்டில் வாழ்வது தெரிந்தது. அவர்களை தொடர்பு கொண்ட போது ஜனனி தாயிடம் இருப்பது தெரியவந்தது. ஜெயலட்சுமி, தனது மகளை பார்க்க முடியாமல் தவித்ததாகவும், மகளுடன் வந்தவர்களிடம் சொல்லிவிட்டுதான் அழைத்து வந்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.தொடர்ந்து, தனிப்படை போலீசார் சிவகங்கை சென்று ஜனனியை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாய்க்கும், தந்தைக்கும் உள்ள பிரச்னையில் இருதலைக் கொள்ளி எறும்பாக குழந்தை தவித்து வருகிறது.