இந்தியக் குழந்தைகளைக் காக்க தெனாலிராமன் இப்போது வருவாரா?

புகழ்மிக்க தெனாலிராமன் கதைகளில் சொல்லப்படும் ஒரு சிறுகதை

ஒரு நாள் இரண்டு பெண்மணிகள் அரசவையில் வந்து வித்தியாசமான வழக்கை அரசன் முன் வைத்தார்கள். தனது குழந்தையை மற்றொரு பெண் அவளது குழந்தை என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்று ஒரு பெண்மணி மற்றொரு பெண் மீது குற்றம் சாட்டினார். இதே குற்றச்சாட்டை மற்றொரு பெண்ணும் முன்வைத்தார்.

உண்மையான தாய் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையோ மிகவும் சிறுவயதுக் குழந்தை. அதன் தாயை அதனால் அடையாளம் காட்ட முடியாது. இப்போது போல அந்தக்காலத்தில் மரபணு சோதனை (DNA Test) போன்ற அறிவியல் முன்னேற்றமும் கிடையாது. இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு சொல்வது என்று அரசனுக்கு குழப்பம் வந்தது.

உடனே அரசன் தெனாலிராமனை அழைத்து இந்த வழக்கை முடித்துவைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். தெனாலிராமன் அந்த இரண்டு பெண்களையும் மறுநாள் விசாரணைக்கு வருமாறு கூறினார். மறுநாள் இருவரும் வந்தவுடன் மன்னரும் ஆவலுடன் தெனாலிராமனின் தீர்ப்பை கேட்கக் காத்திருந்தார்.

தெனாலிராமன் குழந்தையை இரண்டு சமபாகமாக துண்டுகளாக வெட்டி தாய் என்று கூறிக்கொள்ளும் இந்த இரண்டு பெண்களுக்கும் சமமாக பகிர்ந்து கொடுக்குமாறு காவலாளிக்கு உத்தரவிட்டார். இதுதான் தனது தீர்ப்பு என்று கூறினார். இதைக்கேட்ட மன்னர் அதிர்ச்சியடைந்துவிட்டார். இது என்ன கொடூரமான தீர்ப்பாக இருக்கிறதே என்று கோபமடைந்தார்.

குழந்தையை வெட்ட காவலாளி தயாரானபோது அந்த இரண்டு பெண்களில் ஒரு பெண் ஓடிவந்து தனக்கு அந்தக் குழந்தை கிடைக்கவில்லையென்றாலும் பராவாயில்லை எனது குழந்தை உயிரோடு இருக்கவேண்டும் என்று தெனாலிராமனிடம் கேட்டுக்கொண்டாள்.

உடனே தெனாலிராமன் அந்தப் பெண்மணியிடமே அந்தக் குழந்தையை ஒப்படைத்தார். பிறகு மன்னனுக்கு தனது தீர்ப்பை விளக்கமாகக் கூறினார். உண்மையான தாய்க்கு தன் குழந்தையின் நலனில் மிகுந்த அக்கறையிருக்கும். தன் குழந்தைக்காக எதையும் தியாகம் செய்பவள்தான் உண்மையான தாய். அதை இந்தப் பெண் நிரூபித்துவிட்டாள். அதனால் இவள்தான் உண்மையான தாய் என்று கூறி வழக்கை முடித்தார்.

இந்தக் கதையைப் படித்தபிறகு பின்வரும் வீடியோவைப் பாருங்கள். தெனாலிராமன் சாதுர்யமாகத் தீர்ப்பு வழங்கி பேசத் தெரியாத பச்சிளம் குழந்தைக்குக்கூட நீதிவழங்கிய நாட்டில் இப்போது Child Custody, Child Maintenance, Divorce, பொய் வரதட்சணை வழக்குகள் என்ற பெயர்களில் நீதிமன்றங்களும், காவல்துறையும், பொறுப்பற்ற பெற்றோர்களும் பல அப்பாவிக் குழந்தைகளை எப்படி துன்புறுத்துகிறார்கள் என்று தெரியும்.

சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கப்பட்ட இந்த சரியானநீதி வழங்கும் முறை இப்போது சட்டக்கல்லூரிகளில் பல ஆண்டுகள் சட்டங்களை கரைத்துக் கு(ப)டித்தாலும் தெரியுமா என்பது மிகவும் சந்தேகமே.

இந்தியாவில் பிறக்கும் அப்பாவிக் குழந்தைகளை இக்காலத்து இந்தியச் சட்டங்களால் காப்பாற்ற முடியாது. இறைவன்தான் காப்பாற்றவேண்டும்.

No comments: