ஊழலை ஒழிக்க குழந்தைகளின் உயிரை பலி கேட்கும் சமுதாயம்!

உலகத்திலுள்ள நாடுகள் மற்ற நாட்டை சுரண்டி தங்கள் நாட்டு மக்களை வளப்படுத்தி வருவதுதான் பல காலமாக வரலாறு கூறும் உண்மை. ஆனால் இந்தியாவில் மட்டும் சுதந்திரத்திற்குப் பிறகு மக்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் சுரண்டி தந்திரமாக வாழும் முறை இருந்துவருகிறது என்று நாட்டு நடப்புகளை பல ஆண்டுகளாக கவனித்து வருபவர்களுக்கு புரியும்.

“இந்தியா எனது தாய் நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதரர்கள்” என்று பெயரளவில் பெருமைக்காக கூறும் இந்தியர்களின் எண்ணிக்கைதான் அதிகமோ என்று எண்ணும் அளவிற்கு நாட்டில் ஊழலின் தாக்கம் அதிகரித்துவிட்டது.

உண்மையான தேசப்பற்று உள்ள இந்தியன் ஒருவனும் தனது சகோதர இந்தியனை சுரண்டி ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி தனது வாழ்வை வாழ விரும்பமாட்டான். ஆனால் நாட்டு நிலவரம் அப்படியா இருக்கிறது?

மேல்மட்ட ஆட்சி அதிகாரம் செய்பவர் முதல் கீழ்மட்ட பணியாளர் வரை லஞ்சம் வாங்கி, ஊழல் செய்துதான் வாழ்கிறார்கள்.

பல ஆண்டுகளாக பல பள்ளிக்கூடங்களில் தரமே இல்லை. அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என பாகுபாடு இல்லாமல் இந்த தரங்கெட்ட நிலை நிலவி வருகிறது. கடமையை செய்யவேண்டியவர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதனால் பாதிக்கப்படப்போவது வேறு நாட்டுக்காரன் அல்ல, நமது சொந்த மண்ணின் மற்றொரு சகோதரன் என்ற எண்ணமே இல்லாமல் அநியாயத்திற்கு துணை போகிறார்கள். பாதிக்கப்படப்போவது மற்றொரு இந்தியக் குடிமகன் என்று கருதவில்லையென்றாலும் பராவாயில்லை, மற்றொரு சக மனிதன் என்ற மனிதாபிமானம்கூட இல்லாமல் போய்விட்டது இந்த நாட்டில்.

கும்பகோணம் பள்ளி தீப்பிடித்து எரிந்தபோதாவது விழித்துக்கொண்டு அனைவரும் நேர்மையாக பணியாற்றியிருக்கலாம். ஆனால் நடந்திருப்பது என்ன? சென்னையில் இன்று ஒரு குழந்தை பலியாகி இருக்கிறது, பஞ்சாபில் மருத்துவமனையில் ஒரு குழந்தை சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்திருக்கிறது.

இந்த சம்பவங்களில் சக இந்தியன் என்ற பாசமும் இல்லை, சக மனிதன் என்ற மனிதாபிமானமும் இல்லை. இந்தியா எங்கே சென்று கொண்டிருக்கிறது?

சென்னை சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தானாக முன்வந்திருக்கிறது. அப்படியென்றால் ஒவ்வொரு ஊழல் பிரச்சனைக்கும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் ஒரு அப்பாவி உயிர்விடவேண்டுமா இந்த நாட்டில்? அன்று அந்நியனிடம் சுதந்திரம் பெற உயிர் விட்டார்கள் பல தியாகிகள், இன்று சுதந்திர இந்தியாவில் சகோதர இந்தியர்கள் செய்யும் ஊழலின் பிடியிலிருந்து விடுபட எத்தனை உயிர்கள் தேவைப்படுமோ? மக்களின் தேசப்பற்று எங்கே போய்விட்டது?ஜலந்தர்: அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக, 200 ரூபாய் பணத்தை கட்ட, தந்தை தவறியதால், பிறந்து ஐந்து நாளே ஆன குழந்தைக்காக, இணைக்கப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்டன. இதனால், குழந்தை பரிதாபமாக இறந்தது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரது மனைவி அனிதா. கர்ப்பமாக இருந்த இவருக்கு, 21ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, ஜலந்தர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், அக்குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் தொற்று இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிர் காக்கும் கருவிகள் மூலம், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. அப்போது, உயிர் காக்கும் கருவிகளுக்கான கட்டணமாக, 200 ரூபாய் செலுத்தும்படி, சஞ்சீவ் குமாரிடம், மருத்துவமனை செவிலியர்கள் தெரிவித்தனர். அந்தப் பணத்தைக் கட்ட சஞ்சீவ் குமாரால் முடியவில்லை. அதனால், குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்க இணைக்கப்பட்டிருந்த, உயிர் காக்கும் கருவிகளை, செவிலியர்கள் அகற்றினர். இதனால், பிறந்து ஐந்து நாளே ஆன, சஞ்சீவ் குமாரின் குழந்தை இறந்தது. இதையறிந்த, சஞ்சீவ்குமாரும், அவரின் மனைவியும் கதறி அழுதனர். சம்பவம் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இக்பால் சிங்கிடம் கேட்டபோது, ""நான் வெளியூரில் இருக்கிறேன். இந்த சம்பவம் குறித்து எனக்கு தெரியாது. சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். பஞ்சாப் சுகாதாரத்துறை அமைச்சர் மதன்மோகன் மிட்டல் கூறுகையில், ""இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது,'' என்றார்.

=======


சென்னை முடிச்சூர் அருகே, பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து மாணவி பலியான சம்பவத்தை தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாத பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே, நேற்று முன்தினம் பள்ளி பேருந்துக்குள் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி, மாணவி ஸ்ருதி, 7, உடல் நசுங்கி பலியானாள். காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் அனிஷ் சாப்ரா மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவி ஸ்ருதி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை 4 மணிக்கு, சிறுமி உடல், வரதராஜபுரம், புரு÷ஷாத்தமன் நகரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ருதி பலியான வழக்கு தொடர்பாக, மவுன்ட் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் தினகர் விசாரணை நடத்திய பின், பஸ் டிரைவர் சீமான், சீயோன் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் விஜயன், பஸ் கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டியது; வாகனத்தை ஓட்டினால் மரணம் ஏற்படும் என்று தெரிந்தும், அந்த வாகனத்தை ஓட்டியது; பழுதடைந்த வாகனம் என்று தெரிந்தும், அதை ஓட்டி உயிருக்கு பங்கம் விளைவித்தது போன்ற குற்றங்கள் செய்ததாக வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

முதல்வர் நிவாரணம்: பள்ளி மாணவி ஸ்ருதி பலியானதற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, ஸ்ருதியின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், பழுதுள்ள பேருந்தை, குத்தகையின் அடிப்படையில் பள்ளி வாகனமாக இயக்கியதற்கு காரணமானவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அவசர கூட்டம்
: ஐகோர்ட் உத்தரவையடுத்து, தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், போக்குவரத்துத் துறைச் செயலர், கமிஷனர், பள்ளிக்கல்வித் துறை சார்பில் செயலர், முதன்மை கல்வி அதிகாரி, போலீஸ் சார்பில், சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சிறுமி ஸ்ருதி உயிரிழப்புக்கு காரணமான சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என கேட்டு, பள்ளி நிர்வாகத்திற்கு, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் நேற்று மாலை, "நோட்டீஸ்' அனுப்பியது.

"நோட்டீஸ்' விவரம்: குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்த தவறியது ஏன் என கேட்டு, மூன்று நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என இயக்குனரகம் தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் பதிலைப் பெற்றதும், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று, தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆனால், அலுவலகம் திறந்திருந்தது. தாம்பரம் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி முடிச்சூரில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. விபத்துக்குள்ளான பேருந்து, கடந்த 9ம் தேதி, தகுதிச் சான்றிதழ் (எப்.சி.,) பெற வந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன், பேருந்தை சோதனை செய்து, தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ஆர்.டி.ஓ., சஸ்பெண்ட்
: எனவே, பழுதான பேருந்துக்கு சான்று வழங்கிய விவகாரத்தில், ஆர்.டி.ஓ., படப்பச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆர்.டி.ஓ., ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
: சிறுமி ஸ்ருதி பலியான சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்து, ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' தானாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பத்திரிகைகளில் வந்த செய்தியில், சாலையில் இந்த பஸ் செல்வதற்கு தகுதியானது என, 15 நாட்களுக்கு முன் தான் ஆர்.டி.ஓ., ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டுள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது. நாங்களாக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம். பள்ளி அதிகாரிகள், போக்குவரத்து கமிஷனர் மற்றும் சாலையில் செல்வதற்கு இந்த பஸ் தகுதியானது என சான்றிதழ் அளித்த போக்குவரத்து அதிகாரிகள் ஆகியோர், நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அட்வகேட்-ஜெனரல் தொடர்பு கொண்டு, கோர்ட்டில் அவர்கள் ஆஜராக கேட்டுக் கொள்ள வேண்டும். என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதையும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

1 comment:

செழியன் said...

சரியாக சொன்னீர்கள்
வருத்தமான அனால் கோவம் தரும் செய்தி
எனது வலைப்பதிவில் ஒரு கவிதையும் பதிவிட்டு உள்ளேன் ஸ்ருதியை பற்றி...