பிச்சை எடுக்கக் கற்றுக்கொள்!

ஆகஸ்ட் 11,2012 தினமலர்

உற்பத்தி குறைந்ததால், ஏறி வரும் அரிசி மற்றும் தானியங்களின் விலை ஏற்றத்தை தடுக்க மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில் வீணாகி வரும் உணவுப் பொருட்களை வெளிசந்தைக்கு விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விண்ணை முட்டும் அளவிற்கு தொடர்ந்து ஏறி வரும் விலையேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாகவுள்ளது. ஒரு ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் நிர்ணயிக்கும் சக்தியாக உணவுப் பொருட்களின் விலை உள்ளது.கடந்த 1998ம் ஆண்டு, நான்கு மாநிலங்களில் பா.ஜ., ஆட்சி கவிழ்வதற்கு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெங்காய விலை உயர்ந்ததே காரணமாக அமைந்ததை, இதற்கு உதாரணமாக கூறலாம். கடந்த 1967ம் ஆண்டு, தமிழகத்தில், இந்தி எதிர்ப்புக்கு இணையாக, உணவு பஞ்சமும், காங்கிரஸ் அரசு கவிழ்வதற்கும், தி.மு.க.,வின் எழுச்சிக்கும் உதவியது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

வறட்சி:
தற்போது ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் போதுமான மழை இல்லாத தால், நெல், தானியங்கள், உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், அவற்றை பதுக்குவது அதிகரித்துள்ளது. அரிசி மற்றும் தானியங்களின் விலைகள் விறுவிறுவென உயர்ந்து வரலாறு படைக்கும் உச்சத்தை தொட்டுள்ளது, அடித்தட்டு, நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது ஒருபுறம் இருக்க, விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் அரிசி, கோதுமை, தானியங்கள், சேமிப்பு கிடங்குகளில் முறையாக பராமரிக்கப்படாமல் குறிப்பிட்ட சதவீதம் வீணடிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருட்கள் வீணாகி, எலிகளுக்கு உணவானாலும் பரவாயில்லை, அவற்றை மக்களுக்கு குறைந்த விலையில் தரமாட்டோம் என்ற மன நிலையில்,மத்திய அரசு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மத்திய அரசு சேமிப்பு கிடங்குகளில், 26.7 மில்லியன் டன் அரிசி, 20.6 மில்லியன் டன் கோதுமை கையிருப்பில் உள்ளது. இவற்றில் இருந்து ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் டன் உணவு பொருட்கள் வீணாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாட்டில் உணவு பஞ்சம் வராமல் தடுக்க 8.2 மில்லியன் டன் கோதுமையும், 11.8 மில்லியன் டன் அரிசியும் கையிருப்பு இருந்தாலே போதும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கையிருப்பு:ஆனால், அதைவிட கூடுதல் உணவுப் பொருட்கள் கையிருப்பு மத்திய அரசிடம் உள்ளது. இந்த கையிருப்பு மூலம், அரிசி, கோதுமை, தானியங்களின் விலை ஏற்றத்தை மத்திய அரசால் நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும். விலைவாசி உயரும்போது, கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்களை மாநிலங்களின் தேவைக்கேற்ப வெளிச்சந்தையில் விட்டால், விவசாயிகளின் போர்வையில் உலாவும் இடைத்தரகர்கள், பதுக்கல்காரர்கள் வேறு வழியின்றி அவற்றை குறைந்த விலையில் விற்பனை செய்வர்.இதன் மூலம் உணவுப் பொருட்கள் விலைவாசி கட்டுக்குள் வரும். மக்களும் நிம்மதி அடைவர். இனியாவது, மத்திய அரசு தனது முடிவை மாற்றி, வீணாகும் உணவுப் பொருட்களை அவ்வப்போது, வெளிச்சந்தைக்கு விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.

No comments: